×

பாகிஸ்தான் எல்லையில் துல்லியமான தாக்குதல் தீவிரவாதிகள் பலியை கணக்கெடுக்கவில்லை : விமானப்படை தளபதி தனோவா பேட்டி

கோவை: பாகிஸ்தான் எல்லையில் நடத்திய தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் இறந்தனர் என நாங்கள் கணக்கெடுக்கவில்லை, அதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என விமானப்படை தளபதி தனோவா கூறினார். கோவை சூலூர் விமானப்படை தளத்தில், இந்திய விமானப்படை தளபதி தனோவா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் ரக விமானம் பற்றி தவறான விமர்சனம் செய்யப்படுகிறது. மிக் 21 ரக விமானம் அதிக சக்தி வாய்ந்தது. இதன் தாக்குதல் சக்தி இன்னும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. நவீன கருவிகள் மற்றும் ரேடார் இயந்திரம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள தீவிரவாத முகாம்களின் இலக்குகள் மீது, இந்திய விமானப்படை விமானங்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இது, திட்டமிட்ட தாக்குதல். தாக்கவேண்டிய இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, சரியான முறையில் இத்தாக்குதல் நடந்தது. இதில், எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற விவரத்தை நாங்கள் கணக்கெடுப்பதில்லை. மத்திய அரசுதான் அதை அறிவிக்க வேண்டும்.

இந்திய விமானப்படையில், போர் விமானிகளுக்கான உடல் தகுதி பயிற்சி கடுமையாக பின்பற்றப்படுகிறது. விமானப்படையில் பெண்கள் 13 சதவீதம் பேர் பணிபுரிகின்றனர். இந்தியா மீது யார் தாக்குதல் நடத்தினாலும், எதிர்தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை தயாராக உள்ளது. இந்திய விமானப்படை அதிக சக்தி வாய்ந்தது. இதில், எவ்வித சந்தேகமும் வேண்டாம். நமது விமானப்படையில் உள்ள பழைய விமானங்களுக்கு பதிலாக, புதிய விமானங்களை வாங்கும் திட்டம் ஏற்கனவே உள்ளது. அந்த வரிசையில், நமது விமானப்படையின் வலிமையை இன்னும் அதிகரிக்கும் வகையில், ஜாகுவார், மிக் 29, மிராஜ் ரக விமானங்கள் வாங்கப்படும். ரபேல் போர் விமானங்கள் வரும் செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படும். இவ்வாறு விமானப்படை தளபதி தனோவா கூறினார்.

அபிநந்தன் மீண்டும் விமானம் இயக்குவார்

விமானப்படை தளபதி தனோவா கூறியதாவது: பாகிஸ்தான் எப் 16 ரக விமானங்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது அதை நமது விமானப்படை துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டியது. நமது விங் கமாண்டர் அபிநந்தன் மிக் 21 பைசன் ரக விமானம் மூலம் எதிர்தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தானின் எப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எப்14 என்ற பாகிஸ்தானின் மற்றொரு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படையில் 14 வருடம் அனுபவம் கொண்டவர். அவர், தற்ேபாது மருத்துவ பரிசோதனையில் உள்ளார். அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பதை பொறுத்து, மீண்டும் விமானப்படை விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,border crossings ,Danaova ,terrorists ,Air Force , Precise attack, Pakistani border ,did not count,terrorists' sacrifice
× RELATED பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை